பாக்கெட் உணவுகள் மீது தகவல்களை தெரிவிக்க வேண்டும்- சுகாதாரத்துறை இயக்குனர் கடிதம்
- ஓர் உணவுப் பொருள் அதீதமாக கெட்ட கொழுப்பையும், சர்க்கரை மற்றும் உப்பையும் கொண்டிருந்தால் அது ஊறு விளைவிக்கும் உணவாக (ஜன்க் புட்) அறியப்படுகிறது.
- அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு வகை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தகைய உணவுகளை உட் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை:
மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஓர் உணவுப் பொருள் அதீதமாக கெட்ட கொழுப்பையும், சர்க்கரை மற்றும் உப்பையும் கொண்டிருந்தால் அது ஊறு விளைவிக்கும் உணவாக (ஜன்க் புட்) அறியப்படுகிறது. இத்தகைய உணவுகளால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு வகை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தகைய உணவுகளை உட் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதைக் கருத்தில் கொண்டு பாக்கெட் உணவுகளில் உள்ள ஊறு விளைவிக்கும் உட்பொருள்களின் தகவல்களை அவற்றின் லேபிள்களில் தெளிவாக அச்சிடுவதற்கான நடவடிக்கையை உணவுப் பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பொதுமக்கள் எளிதில் அவற்றை புரிந்து கொள்ளும் வகையில் நிறக் குறியீடுகள் மூலமாகவோ அல்லது வேறு எச்சரிக்கை குறியீடுகள் மூலமாகவோ அதனை குறிப்பிடவேண்டும்.
சராசரியாக ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய கொழுப்புச்சத்து, சர்க்கரை மற்றும் உப்பு சத்துகளின் அளவையும், அதிலிருந்து சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் எத்தனை மடங்கு அதிகமாக உள்ளது என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் லேபிள்களில் அச்சடித்தல் அவசியம்.