ரெயில் பொது பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு 20 ரூபாயில் பூரிக்கிழங்கு உணவு- ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு
- முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
- பொதுப்பெட்டி பயணிகளுக்கான மலிவு விலை உணவு வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வசதி செய்யப்பட உள்ளது.
சென்னை:
ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கு உணவு குறையாமல் அதற்கேற்ற விலையை ஐ.ஆர்.சி.டி.சி. நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது.
டீ, காபி, டிபன், மதிய உணவு உள்ளிட்டவை வெளி இடங்களைவிட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.
மேலும் பயணம் செய்கின்ற ரெயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு ஊழியர்கள் மூலம் உணவு, நொறுக்குத்தீனிகளும் விற்பனை செய்யப்படு கின்றன.
இந்த நிலையில் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்காக 2 வகை கட்டணத்தில் உணவு வழங்கப்பட உள்ளது.
முதல் வகை உணவுக்கு ரூ.20 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் 7 பூரிகள், உலர் பருப்பு கூட்டு, ஊறுகாய் இடம் பெறும். 2-வது வகை உணவுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இவை தவிர தென் இந்திய உணவு வகைகளும் வழங்கப்படும்.
குறிப்பாக அரிசி சாதம், சிவப்பு காராமணி உணவு, மசால்பூரி, கிச்சடி, பட்டுரே, பாவ் பாஜி, மசாலா தோசை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ரெயில்வே மூலம் பொதுப்பெட்டிகள் வந்து நிற்கும் நடைமேடை பகுதியில் இதற்கான உணவு கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது. இந்த உணவுகள் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தயாரித்து வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுப்பெட்டி பயணிகளுக்கான மலிவு விலை உணவு வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வசதி செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ரெயில் நிலையங்களில் வந்து நிற்பதற்கு வசதியாக பிளாட்பாரங்கள் சீரமைக்கப்பட உள்ளது. இந்த உணவு கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் 6 மாதம் செயல்படும்.
ரெயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் 51 நிலையங்களில் இந்த உணவு கவுண்டர்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மேலும் 13 ரெயில் நிலையங்களில் உணவு கவுண்டர்கள் திறக்கப்படும் என்று வாரியம் தெரிவித்து உள்ளது.