பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
- மிச்சாங் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
- மிச்சாங் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.6.2023 அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, ஏதோ புயல் பாதித்த பிறகு ஏதோ தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் மோடி அரசும், இங்குள்ள பா.ஜனதாவும் முனைந்திருக்கிறார்கள். 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட 450 கோடி ரூபாயை மிச்சாங் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள்.
வழக்கமான மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டி ஏமாற்றுகிறது மத்திய நிதித்துறை அமைச்சகம்.
மிச்சாங் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிச்சாங் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் என்பது இனி வரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்துக்கான நிதியாகும்.
மிச்சாங் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி. ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் 450 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாட்டை வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.