மார்க்கெட் வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலை திருட்டு
- நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
- காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கட்டிடம் கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதே நாளங்காடியின் நுழைவுவாயிலின் மாடியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. அந்த நாளங்காடிக்கு காந்தி மார்க்கெட் என பெயரிடப்பட்டது.
தொடர்ந்து 1984-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாளங்காடி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது இந்த நுழைவு வாயில் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த காந்தி உருவச்சிலை அதே இடத்தில் இருந்தது.
இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் காந்தி பிறந்தநாள், நினைவுநாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது கட்டிடங்கள் கட்டி 39 ஆண்டுகள் ஆகியுள்ளதாலும், தற்போது பழுதாகி பயன்பாட்டிற்ககு உகந்த நிலை உள்ளது.
இதனால் நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதில் நாளங்காடியின் பின்பக்கம் இருந்த இறைச்சி விற்பனை பகுதி மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகள் இடிக்கப்படவில்லை.
இக்கட்டிடத்தில் வணிகம் செய்த வணிகர்கள் பலர் கடைகளை காலி செய்து தர தாமதம் செய்வதால் இடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் நகராட்சி நாளங்காடியின் நுழைவுப்பகுதிக்கு ஆட்டோவில் வந்த சிலர் மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
காந்தியின் சிலை அகற்றப்பட் டது குறித்து அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது தங்களுக்கு இது குறித்து தெரியாது எனவும், சிலையை அகற்ற யாரிடமும் கூறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.