12 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'மெட்ராஸ் ஐ' பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்
- நல்ல தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- சென்னையில் தினமும் சராசரியாக 80 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. உள்நோயாளியாக பெரிய அளவில் யாரும் சேரவில்லை.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று எழும்பூர் சி.டி.நாயகம் பள்ளியில் மெட்ராஸ் ஐ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
பருவமழைக்கு முன்பு கண் நோய் வருவது இயல்புதான். அதே நேரம் இயல்பைவிட குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
சென்னையில் பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் குழந்தைகளுக்கும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை நடத்தப்படும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நல்ல தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கடந்த 2 மாதங்களாக குஜராத், கோவா, ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவி வருகிறது. இதற்காக அச்சப்பட தேவையில்லை.
சென்னையில் தினமும் சராசரியாக 80 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. உள்நோயாளியாக பெரிய அளவில் யாரும் சேரவில்லை.
தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
திருவாரூரில் இறந்த மருத்துவருக்கு டெங்கு, டைபாய்டு காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து பரவும் நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவி விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.