திருவல்லிக்கேணியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
- சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.
- 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது. காலை உணவு நன்றாக இருக்கிறதா? என்று குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.
மாணவர்களும் பெற்றோர்களும் இத்திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த திட்டமும் சிறந்ததாகும். மாணவர்களோடு நானும் ஒரு பயனாளியாக அமர்ந்து சாப்பிட்டேன்.
இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாது காப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.
இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது. எங்காவது குறை இருந்தாலும் சரி செய்யப்படும்.
உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது மிகப்பெரிய சாதனையாகும். சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படும். 19 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் பல சாதனைகளை செய்வார்.
சந்திரயான்-3 வெற்றி எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. 3 தமிழர்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாந்தோப்பு பள்ளியிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் மடுமாநகரில் உள்ள பள்ளியிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மண்டலத் தலைவர்கள் மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.