தமிழ்நாடு
திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை காணலாம்.

தேசிய கொடிகள் தயாரிப்பு- திருப்பூர் நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்

Published On 2022-07-23 04:59 GMT   |   Update On 2022-07-23 04:59 GMT
  • திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
  • தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே கொடிகள் தயாரிக்கின்றன.

திருப்பூர்:

நாட்டின் 75வது சுதந்திர தினம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் கூறுகையில், தற்போது, 75வது ஆண்டு சுதந்திர தினம் என்பதாலும் அரசு சார்பில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியும், வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தேசிய கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகம் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே கொடிகள் தயாரிக்கின்றன. வட மாநிலங்களில் இருந்து காகிதம் மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூர்-கோவையில் மட்டுமே தயாராகிறது.

தற்போதைய விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 15 சதவீதம் வரை தேசிய கொடியின் விலை உயர்ந்துள்ளது. இதுவரை ஏறத்தாழ 10 லட்சம் ஆர்டர்கள் வரப்பெற்று திருப்பூர், கோவை நிறுவனங்களில் உற்பத்தி மும்முரமாக நடக்கிறது என்றனர்.

Tags:    

Similar News