தமிழ்நாடு

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-07-27 08:10 IST   |   Update On 2024-07-27 08:10:00 IST
  • அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
  • தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

சென்னை:

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "சிலர் கூட்டத்தில் பேசும்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சொத்து. அதன் 1½ கோடி தொண்டர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது தான் எனது கடமை'' என்று பேசினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளராக மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள்.

இதன் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதை நிரூபித்து இருக்கிறார்கள். சி.வி.சண்முகமும் அதிமுக ஒருங்கிணைவதை விரும்புவதாக சொல்கிறார்கள். அவர் அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று சொல்லி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமே அதிமுக ஒருங்கிணையாதது தான். இரட்டை இலை சின்னம் இதுவரை இதுபோன்ற தோல்வியை கண்டது இல்லை. அதிமுகவை பதவிக்காக ஒருங்கிணைக்க விரும்பவில்லை. தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

பொதுக்குழு தொடர்பான 6 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று தெரிவித்து உள்ளது. அந்த தீர்ப்பு தான் இறுதியானது என்று சொல்லி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் எப்போது பொதுச்செயலாளர் ஆனார் என்று நீதிபதி கேட்டு இருக்கிறார். பதில் சொல்ல முடியவில்லை. உடனே வாபஸ் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News