பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல்.
- பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டை விட ஒரு சதவீதம் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற பால் பாக்கெட்டின் விலையினை பச்சை நிற பால் பாக்கெட் விலைக்கு இணையாக விற்பனை செய்வது என்பது மறைமுகமாக பாலின் விலையை உயர்த்துவதற்குச் சமம்.
இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியை பறிக்கும் நடவடிக்கை. தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல். கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.