திருப்பூரில் முறைகேடாக இயங்கிய தனியார் கிளினிக் மூடல்- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
- கிளினிக் ஆவணத்தில் குறிப்பிட்ட டாக்டர் அங்கு இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் தனியார் கிளினிக் உரிய ஆவணங்கள் இன்றி செயல்படுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிளினிக் ஆவணத்தில் குறிப்பிட்ட டாக்டர் அங்கு இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தது. மேலும் அங்கிருந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கிளினிக் முறைகேடாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கிளினிக் மற்றும் அருகில் உள்ள மருந்துக்கடை மூடப்பட்டது.
ஆய்வு குறித்து மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-
புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிளினிக் மற்றும் மருந்துக்கடையில் விசாரணை நடத்தப்பட்டது. பவித்ரா என்ற பெண் டாக்டர் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வேறு ஒருவர் சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவ தகுதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிளினிக், மருந்தகம் மூடப்பட்டுள்ளது. சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு நடத்தப்பட்டு அதன்பிறகு சீல் வைப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.