லாரி மீது ஆம்னி பஸ் மோதி 2 பேர் பரிதாப பலி: வேளாண் அதிகாரி உள்பட 7 பேர் படுகாயம்
- காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- பத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
குன்னம்:
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த லத்தீஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.
பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி-பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் கொண்டகாரபள்ளம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரம் சிந்தாமணி குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன்(31) என்பவர் ஓட்டினார்.
எதிர்பாராத விதமாக ஆம்னிபஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பஸ்சில் வந்த மற்ற பயணிகள் விருதுநகர் மாவட்டம் சிவந்திப்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(52), நெல்லை மாவட்டம் மதுராநத்தம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த ஞானராஜ்(38), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த இசக்கியம்மாள்955), அவரது உறவினர்கள் லட்சுமி(45), ஜோதி(47), குமரன்(50), லாரி டிரைவர் சரவணன், ஆம்னி பஸ் டிரைவர் லத்தீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
பலியான பிரதீஷ், அந்தோணிராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
காயம் அடைந்த ஞானசேகர் வள்ளியூரில் வேளாண் அதிகாரியாக உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.