பழனிவேல் தியாகராஜன் பதவி விலகியதாக பரபரப்பு- டுவிட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டதாக தகவல்
- பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.
சென்னை:
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பான நிதித்துறையை யாருக்கு வழங்குவது என விவாதம் எழுந்தபோது அதற்கு தகுந்த நபராக பழனிவேல் தியாகராஜன் திகழ்ந்தார்.
பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். நிதிச்சுமையை எவ்வாறு குறைப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
காகிதம் இல்லாத பட்ஜெட்டை உருவாக்கியும், பல்வேறு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்தார்.
இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தி.மு.க.வின் தொழில்நுட்ப மாநில செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பேட்டியின் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் மதுரை அரசியல் தொடர்பாக அங்கு உள்ள அமைச்சருக்கும், இவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது.
இதற்கிடையே அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும், கடக்க போகும் பாதை குறித்தும் புத்தகம் எழுத இருந்தார். இதுகுறித்து புத்தாண்டில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 2023-ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம் இது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும், புதிய நம்பிக்கைகளுக்கான உறுதிமொழியையும் ஏற்கும் நேரம் இது. நான் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தை எழுத தொடங்கி உள்ளேன்.
அரசியலில் இருந்து வெளியேறிய பிறகு அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் வெளியானதும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவியது. இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார். நான் வெளியிட்ட டுவிட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை வைத்து சிலர் வேறுமாதிரி புரிந்துள்ளனர். நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும்.
இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.