முல்லைபெரியாறு அணையில் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி- விவசாயிகள் எதிர்பார்ப்பு
- மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
- பேபி அணையில் உள்ள 13 மரங்களை அகற்றி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணையின் உறுதி தன்மை குறித்து கேரள அரசு மற்றும் சில அமைப்பினர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரள அரசு சார்பில் நீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலர் ஜோஸ், நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ்வர்க்கீஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு மேமாதம் 9-ந்தேதி அணைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் நாளை ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்கள் கொண்டு செல்ல வல்லக்கடவில் இருந்து அணைக்கு வரும் வனப்பாதையை சீரமைக்க வேண்டும். பேபி அணையில் உள்ள 13 மரங்களை அகற்றி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்ககூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தும் தொடர்ந்து கேரள வனத்துறை பிரச்சினை செய்து வருகின்றனர்.
எனவே நாளை ஆய்வின்போது தமிழக அதிகாரிகள் இதுகுறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைக்குமா என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.