தமிழ்நாடு

'சீமானை பார்க்க வேண்டும்' - குடும்பத்தினரை வீட்டில் அடைத்து தற்கொலை மிரட்டல்

Published On 2024-07-01 08:57 GMT   |   Update On 2024-07-01 08:59 GMT
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் குமரானந்தபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் இளங்காமணி (வயது 47). பழைய இரும்பு கடைவைத்துள்ளார். தனது மனைவி மற்றும் 14 வயது, 9 வயது என இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இளங்காமணி, தனது மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் வைத்து பூட்டியதுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும். இல்லையென்றால் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு பற்ற வைத்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இளங்காமணியை கதவை திறக்க செய்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இளங்காமணியை வீட்டிலிருந்து வெளியே மீட்டு வரும்போது, சீமானை பார்க்க வேண்டும் என்று கூறி, காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்துள்ளார்.

இதில் லேசான காயமடைந்த அவரை போலீசார் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்காமணி கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து இவ்வாறு செய்துள்ளார். ஒரு வழியாக அவர்கள் செல்போன் மூலமாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன் காரணமாக போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்த்தனர்.

Tags:    

Similar News