ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர் பொன்முடி பேட்டி
- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது.
- கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கள் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் சி. அண்புமணி போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.
இந்நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி. விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடது. அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.
தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது. இவர்களுடன் அ.தி.மு.க. இல்லை. எனவே, தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.