தமிழ்நாடு

ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

மின் விநியோகம் இன்று மாலைக்குள் சீராகும்- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Published On 2022-12-10 09:30 GMT   |   Update On 2022-12-10 09:42 GMT
  • தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு.
  • சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சென்னை.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கடுமையான மழையும், காற்றும் இருந்தது. நள்ளிரவு வரை எங்கும் மின்தடை இல்லை.

நள்ளிரவுக்குப் பிறகு காற்று அதிகமானதால் எந்தவித உயிர்ச்சேதமோ, பாதிப்போ ஏற்படா வண்ணம் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33கி.வோ., 11 33கி.வோ.,.22 கி.வோ., 110 கி.வோ.,230 கி.வோ., மற்றும் 400 கி.வோ., உட்பட மொத்தம் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, நேற்று இரவு முழுவதும் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் களஆய்வு செய்து எந்த இடத்தில் பாதிப்புகள் உள்ளதோ அவற்றை எல்லாம் உடனுக்குடன் சரி செய்து இன்று மதியத்திற்கு முன்னதாகவே சீரான மின் விநியோகம் வழங்கப்படக் கூடிய வகையில் களத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே, இன்று மதியத்திற்கு முன்னதாகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். சென்னையைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மீதம் இருக்கக்கூடிய புறநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்பதை களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News