லுலு மார்க்கெட்டை எதிர்த்து போராட்டம்: வெள்ளையன்-சந்திரன் ஜெயபால், கொளத்தூர் ரவி உள்பட 1000 பேர் கைது
- வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
- வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சென்னை:
தமிழக அரசு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் லுலு வணிக குழுமத்தை தமிழகத்தில் மார்க்கெட் அமைக்க அனுமதித்துள்ளது.
இதன்படி கோவையில் லுலு மார்க்கெட் கடந்த மாதம் திறக்கப்பட்டது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் லுலு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது.
சிறு வணிகர்களுக்கு சவாலாக உருவாகி உள்ள லுலு மார்க்கெட்டை விரட்டியடிப்போம் என்று தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டு விரட்டும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிட போவதாக போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னின்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலையில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிட வணிகர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலும் நடந்தது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் பெருங்குடி சவுந்தரராஜன், போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச் செயலாளர் கே.சி.ராஜா மற்றும் மின்னல் எச்.ஸ்டீபன், முத்து ரமேஷ், ஆலந்தூர் பி.கணேசன், சங்கரலிங்கநாதன், செல்வகுமார், எஸ்.ஆர்.பி.ராஜா, மாரீஸ்வரன், சைதை ஜெயராஜ், வேளச்சேரி செல்வராஜ், மகாராஜா உள்பட 1000-க்கும் மேற்பட்ட வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.