புகை பிடிப்பதை தவிர்த்தால் 40 சதவீதம் சர்க்கரை நோயை தவிர்க்கலாம்- உலக சுகாதார நிறுவனம் தகவல்
- சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
- சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும்.
சென்னை:
சர்க்கரை வியாதி என்பது உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை பொறுத்தவரை சர்க்கரை நோய் வியாதி டைப்-1, டைப்-2 என்று இரண்டு வகை உள்ளன.
சர்க்கரை நோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டாலும் முக்கியமான காரணம் புகைப்பிடிப்பது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடலின் வழக்கமான செயல்பாட்டை புகைப்பிடிப்பது மாற்றி அமைத்துவிடும். அதாவது இன்சுலின் சுரப்பதை கட்டுப்படுத்தும்.
இதனால் டைப்-2 சர்க்கரை வியாதி உடலில் ஏற்கனவே இருந்தால் அது அதிகரிக்கும். இல்லை என்றால் வருவதற்கு ஆயத்தமாகும். சர்க்கரை வியாதி டைப்-2 என்பது பரவலாக இருப்பது தான். இது நாள்பட்ட வியாதி ஆகும். இதை உரிய மருந்துகள் மூலம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.
ஏனெனில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு எப்படி அது ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகுமோ அதேபோல் புகைப்பிடிப்பவர்களுக்கும் காயம் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகும்.
சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சர்க்கரை வியாதியால் உயிரிழப்புகளும் நேரிடுகிறது. காரணம் சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும். உயிரிழப்புகளுக்கு சர்க்கரை வியாதியும் ஒரு காரணமாகி உள்ளது.
புகை பிடிப்பதை கைவிட்டால் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்கும் படி மக்களிடம் விழிப்புணர்வை அதிக அளவு ஏற்படுத்தி வருகிறார்கள்.
புகைப்பிடிப்பதை குறைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. புகைப்பிடிப்பதை குறைப்பதன் மூலம் இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மட்டுமின்றி சர்க்கரை வியாதி வருவதையும் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 13 கோடி பேர் சர்க்கரை நோய் வரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களாகவும் கண்டறியப்பட்டு உள்ளார்கள். கேரளா, புதுவை, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் அதிலும் நகர வாழ்க்கை அதிகமாக இருக்கும் இடங்களில் சர்க்கரை வியாதி அதிக அளவில் காணப்படுகிறது.