தமிழ்நாடு

முத்துக்குமாரசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு- இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

Published On 2023-03-18 08:14 GMT   |   Update On 2023-03-18 08:14 GMT
  • முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது.
  • கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று (சனிக்கிழமை) சென்னை, கந்தக் கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது.

சென்னை, கந்தக்கோட் டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.

மனிஷ் பி.ஷா என்பவர் இக்கட்டிடத்தை ஆக்கிர மிப்பு செய்து மருத்துவ பயன்பாட்டை சிதைத்து 12 நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு லாபம் அடைந்து வந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் மேல்முறையீட்டு உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம். பாஸ்கரனால் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மேற்படி கட்டிடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடியாகும்.

இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) திருவேங்கடம், கோவில் செயல் அலுவலர் நற்சோணை மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News