தமிழ்நாடு

நெஞ்சை பதற வைக்கும் வீடியோ- தாயுடன் நடந்து சென்ற பள்ளி சிறுமியை முட்டி தூக்கி வீசிய மாடு

Published On 2023-08-10 06:06 GMT   |   Update On 2023-08-10 07:41 GMT
  • ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் தூக்கி வீசியது.
  • மாடு முட்டி தாக்கியதில் சிறுமிக்கு பல இடங்களில் ரத்த காயம், சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

அண்ணாநகர்:

சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவியது. நெஞ்சை பதற வைக்கும் அந்த காட்சி அனைவரையும் சில நிமிடங்கள் உறைய வைத்து விடுகின்றன.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹர் சின்பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா (9). எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகள் 2-ம் வகுப்பு படிக்கிறார். இரண்டு மகள்களையும் பானு தினமும் பள்ளிக்கு நடந்து சென்று விடுவதும், பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்தும் வருவது வழக்கம்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு பானு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி இளங்கோ தெரு வழியாக சென்றபோது மாடுகள் ரோட்டில் சென்று கொண்டிருந்தன.

அப்போது ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் தூக்கி வீசியது. தாயின் கையை பிடித்தவாறு சென்ற சிறுமியை சற்றும் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மாடு தூக்கி வீசியதில் பானு அதிர்ச்சி அடைந்தார். தூக்கி வீசிய சிறுமியை மாடு விடாமல் குத்தி தரையில் அழுத்தியது.

பானுவின் கண்முன்னே மாடு தனது மகளை தாக்கியதை தொடர்ந்து சாலையில் கிடந்த கற்களை கொண்டு மாட்டின்மீது வீசி தாக்கினார். இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டவாறு மாட்டின்மீது கற்களை வீசி அதனை விரட்ட முயற்சித்தனர்.

ஆனாலும் மாடு சிறுமியை விடவில்லை. தொடர்ந்து கொம்பால் குத்திக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ஒருவர் கட்டையால் மாட்டை அடித்து விரட்டினார். அதன்பிறகே மாட்டின் பிடியில் இருந்து சிறுமி தப்பினார்.

மயங்கி கிடந்த சிறுமியின் முகத்தின் மீது தண்ணீர் தெளித்தனர். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை பானு கொண்டு போய் சேர்த்தார். மாடு முட்டி தாக்கியதில் சிறுமிக்கு பல இடங்களில் ரத்த காயம், சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

சாலையில் நடந்து சென்ற சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். மாட்டின் உரிமையாளர் அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் (26) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமி தாக்கிய மாட்டை மாநகராட்சி ஊழியர் கொண்டு சென்றார்.

சென்னையில் பொது இடங்களில், மாடுகள் இஷ்டத்திற்கு அலைந்து திரிகின்றன. அதனை உரிமையாளர்கள் கட்டுப்படுத்துவது இல்லை. சாலை விபத்தையும், இதுபோன்ற விபரீதத்தையும் அவ்வப்போது ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதத்தொகை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News