தமிழ்நாடு

சனாதனம் வலியுறுத்தும் கடமைகளும் அழிக்கப்பட வேண்டியவையா?: நீதிபதி சேஷசாயி கேள்வி

Published On 2023-09-16 10:41 GMT   |   Update On 2023-09-16 10:41 GMT
  • மலேரியா, டெங்கு போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
  • சனாதனம் பல கடமைகளை குடிமகன்களுக்கு வலியுறுத்துகிறது என்றார் நீதிபதி

கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று சென்னையில் "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த "சனாதன எதிர்ப்பு" கூட்டத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அதில் அவர், "சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; மலேரியா, டெங்கு போல் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என பேசினார்.

உதயநிதியின் கருத்திற்கு தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்டணியின் பல தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. ஆனால், தமிழக எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. தற்போது வரை இந்த சர்ச்சை ஓயவில்லை.

இது சம்பந்தமாக உதயநிதிக்கு எதிராக முதலில் உத்தர பிரதேசத்திலும், பிறகு மகராஷ்டிரத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் கிடாரம்கொண்டான் பகுதியில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் சார்பாக மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான நேற்று சனாதனத்திற்கு எதிராக மாணவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த சுற்றறிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உத்தரவிடுமாறு இதனை எதிர்த்து தமிழகத்தின் இந்து முன்னணியை சேர்ந்த டி. இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இவர் சார்பில் ஜி. கார்த்திகேயன் எனும் மூத்த வழக்கறிஞர் வாதாடினார். இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி என். சேஷசாயி கருத்து தெரிவிக்கும் போது:

"கருத்து சுதந்திரம் முழுமையான கட்டுப்பாடற்ற சுதந்திரமல்ல. அரசியலமைப்பு சட்டத்தின் 19-(2) பிரிவின்படி சில நியாயமான கட்டுப்பாடுகளும் அதில் விதிக்கப்பட்டுள்ளது. பொது அரங்கில் கருத்து சுதந்திரத்தை மத உணர்வு சம்பந்தமான விஷயங்களில் பயன்படுத்தும் போது எவர் மனமும் புண்படாமல் பேச வேண்டும்."

"சமூகத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் விதமாக கருத்து சுதந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் வெறுப்பு பேச்சுக்கான அனுமதி அல்ல. மேலும், ஒரு குடிமகன் நாட்டிற்கும், நாட்டை ஆள்பவருக்கும், தனது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமையை சனாதனம் வலியுறுத்துகிறது. சனாதனத்தை அழிக்க வேண்டும் என கூறுபவர்கள் அத்தகைய கடமைகளையும் அழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறீர்களா? ஒவ்வொரு மதத்திற்கும் சில நம்பிக்கைகள் உள்ளன," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News