தமிழ்நாடு

மயானம் அமைத்து தரக்கோரி இலங்கை அகதிகள் சாலை மறியல்

Published On 2024-10-13 10:00 GMT   |   Update On 2024-10-13 10:00 GMT
  • அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
  • சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வெள்ளிசந்தை:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளிடேம் அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளிடேம் அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் அவசரகதியில் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தின.

கடந்த 7 மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை விடுத்தனர் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,

இந்த நிலையில் இந்த முகாமை சேர்ந்த ரூபன் (வயது55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும், பழைய முகாமில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாததாலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாததால் மயானத்திற்கு இடம் கேட்டு பாலக்கோடு-கேசர்குளி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார், தாசில்தார் ரஜினி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், மயானத்திற்கு இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுகொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News