கல்லூரி பஸ்சுக்குள் மாணவர்கள் பயங்கர மோதல்: மாணவருக்கு கத்திக்குத்து
- அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குளித்தலை:
கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் திருச்சி, தொட்டியம், முசிறி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி சார்பில் மாணவர்களுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் (வயது 19) 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். இன்று காலை இந்த 2 மாணவர்களும் சக மாணவ, மாணவிகளுடன் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி மோதலாக உருவானது.
இருவரும் கைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தினார்.
இதனால் அவருக்கு ரத்தம் பீறிட்டது. நிதீஷ்குமார் அலறிதுடித்தபடி சாய்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக திருப்பி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்தனர்.
மாணவர் அண்ணாமலை சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும், இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் நிதிஷ்குமாரின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.
கல்லூரி பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.