அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக 26 மணி நேரம் டாக்டர் குழுவுடன் பறந்து வந்த பெண்
- கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பெண் ஒரிகானில் இருந்து விமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார்.
- விமானத்தில் 3 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.
ஆலந்தூர்:
பெங்களூரைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஒரிகான் நகரில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வந்தார்.
அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோயின் தாக்கம் குறையவில்லை. அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார். சாதாரண பயணிகள் போல் பல மணி நேரம் பயணம் செய்ய முடியாது என்பதால் பெங்களூரைச் சேர்ந்த தனியார் ஏர் ஆம்புலன்சு சேவையை அணுகினார். அவர்கள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து இருந்தனர்.
ஏர் ஆம்புலன்சு விமானத்தில் ஐ.சி.யூ. சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பெண் ஒரிகானில் இருந்து விமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். விமானத்தில் 3 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.
ஐஸ்லாந்து, துருக்கி வழியாக சுமார் 26 மணி நேர பயணத்துக்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 2.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது.
அங்கிருந்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெங்களூர் பெண்ணுக்கு விரைவில் இருதய ஆபரேசன் செய்யப்பட உள்ளது.
இந்த ஆம்புலன்சு விமான பயணத்துக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஆனதாக தெரிகிறது.
இதுகுறித்து ஏர் ஆம்புலன்சு சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள சிகிச்சை அவருக்கு போதுமானதாக இல்லை என்று உணர்ந்து இருந்தனர். எனவே அவர்கள் இங்கு சிகிச்சைக்கு வர முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம்.
ஏர் ஆம்புலன்சில் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஓரிகானில் இருந்து தொடங்கியது.
நோயாளியைக் கண்காணிக்க விமானத்தில் 3 மருத்துவர்கள் மற்றும் இரண்டு உதவியாளர் உள்பட மருத்துவக் குழுவுடன் ஐ.சி.யூ.வும் தயார் செய்யப்பட்டு இருந்தது.
விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஐஸ்லாந்து தலைநகரில் நிறுத்தப்பட்டது. மேலும் துருக்கி விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் நோயாளி மாற்றப்பட்டார். பின்னர் கடைசியாக தியர்பாகிரில் இருந்து விமானம் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.