தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் சேவையால் கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவ மரணம் குறைந்துள்ளது- சவுமியா அன்புமணி

Published On 2023-03-07 09:16 GMT   |   Update On 2023-03-07 09:16 GMT
  • பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.
  • பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சென்னை:

சென்னை ராணி மேரி கல்லூரியில் "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-

பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள்.

இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.

கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News