தமிழ்நாடு

சென்னையில் பருவ மழையின்போது சாலைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற கூடுதலாக 50 லாரிகள்- குடிநீர் வாரியம் ஏற்பாடு

Published On 2023-09-15 06:19 GMT   |   Update On 2023-09-15 06:19 GMT
  • சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
  • லாரிகளை திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து வாடகைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை:

பருவ மழையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, அதை உடனே அகற்ற மோட்டார்கள், சூப்பர் சக்கர்கள் பயன்படுத்தப்பட்டு கழிவுநீர் லாரிகள் மூலம் அகற்றப்படும். இப்பணிகளில் சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் ஈடுபடும்.

இந்த நிலையில் சென்னையில் பருவ மழையின் பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடிநீர் வாரியம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி வெள்ளம் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்கான பணிகளில் ஈடுபட ஊழியர்கள், எந்திரங்களை தயார்படுத்தி வருகிறது. தற்போது குடிநீர் வாரியத்திடம் 537 லாரிகள் உள்ளன.

கூடுதலாக 50 லாரிகளை ரூ.1.43 கோடி செலவில் வாடகைக்கு எடுக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த லாரிகளை திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து வாடகைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த லாரிகள் மண் அகற்றும் எந்திரங்கள், ஜெட்ரோடர்கள், சூப்பர் சக்கர்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும்.

மேலும் ரூ.15 கோடி முதல் ரூ.17 கோடி வரையில் அதிக குதிரைத்திறன் கொண்ட 50 பம்புகளை வாடகைக்கு எடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தை எதிர் கொள்வதில் சென்னை மாநகராட்சிக்கு உதவியாக இருப்போம். கழிவுநீர் தடுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை காலத்தில் கழிவுநீர் வழக்கமான அளவை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். எனவே கழிவு நீரேற்று நிலையங்கள், மழை நீர் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்.

மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும் டீசல் ஜெனரேட்டர்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்காக பம்பிங் நிலையங்களை இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News