2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க.வுடன் இனி கூட்டணியே கிடையாது
- சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
- அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?
பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.
எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.
கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?
பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?
பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.
கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?
பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.
தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.
சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.
கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?
பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.
இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?
பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.
எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.