மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை
- பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர்.
- தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறைந்து விட்டது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நிறுவனங்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதையும் அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எட்டாவது முறையாக அந்த அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு மறுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு அறிவித்த நேரடியான மற்றும் மறைமுகமான மின்கட்டண உயர்வைத் தாங்க முடியாமல் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர். தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறைந்து விட்டது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வரும் 27-ம் நாள் நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. பா.ம.க.வினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதேநேரத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் மனிதச்சங்கிலி போராட்டத்தை தமிழக அரசு கைவிடச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.