நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் திடீர் தீ
- அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
- நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது.
அரக்கோணம்:
அரக்கோணம் வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சேலம் அணுமின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தை கடந்த போது கடைசி பெட்டியில் புகை வந்தது. இதைப் பார்த்த திருவள்ளூர் ரெயில் நிலைய போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
பின்னர் அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் சோதனை செய்தனர்.
நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது. அந்தப் பெட்டியை தனியாக துண்டித்தனர்.
உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு தீ பற்றிய பெட்டியை எடுத்துச் சென்றனர். பின்னர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயிலில் பற்றி எரிந்த தீயை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நிலக்கரி அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.