தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்... பரபரப்பு தகவல்கள்

Published On 2024-07-06 11:29 IST   |   Update On 2024-07-06 11:29:00 IST
  • கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
  • நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை :

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பிறகே கொலையே அரங்கேற்றி உள்ளனர்.

புன்னை பாலு என்பவர் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆவார். கைதான புன்னை பாலு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், அண்ணனைக் கொன்றதோடு ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர் கொலை மிரட்டல் வந்ததால் என் மனைவி பயத்தில் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News