தமிழ்நாடு

சென்னையில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகளுடன் ராணுவ வீரர்- வக்கீல் கைது

Published On 2023-08-18 08:31 GMT   |   Update On 2023-08-18 08:31 GMT
  • கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளில் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போதும் மாற்றும்போதும் உஷாராக இருக்க வேண்டும்.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இவர்களது கடையில் கடந்த 2 மாதங்களாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது கள்ளநோட்டுகளை கொடுத்து சிலர் காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் தினேஷ், மணி இருவரும் காய்கறிகள், பழங்களை வாங்க சென்றபோதுதான் இது தெரிய வந்தது. இவர்கள் மொத்த வியாபாரிகளிடம் கொடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கள்ள நோட்டுகளை கண்டுபிடித்து, அவற்றை தினேஷ் மற்றும் மணியிடம் திரும்ப கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து தினேஷ், மணி இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறு கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும்போது ஒரு முறைக்கு இருமுறை நல்ல நோட்டு தானா? என்று பார்த்து வாங்குங்கள் என மொத்த வியாபாரிகள் தினேஷ், மணிக்கு அறிவுரை கூறியுள்ளனர். அடிக்கடி கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி மர்ம நபர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்று விடுவதால் தினேஷ் ,மணி இருவருக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து தங்களது கடையில் கள்ள நோட்டுகளை மாற்றுவது யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க இருவரும் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு தினேஷ், மணியின் காய்கறி கடையில் வழக்கம்போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கடைக்கு வந்த ஒரு முதியவர் ரூ. 670 க்கு காய்கறி, பழங்களை வாங்கிவிட்டு 3 புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். இதில் 670 ரூபாய் போக மீதி தொகையையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லரையையும் கேட்டார். இந்த ரூபாய் நோட்டுகளை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் வீராசாமி உரிமையாளர் தினேஷிடம் முதியவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை காண்பித்தார். அப்போது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து முதியவரை பிடித்து வைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தினேஷ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அண்ணாமலை என்பது தெரியவந்தது. 64 வயதான இவர் பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான அவர் கொடுத்த தகவலின் பேரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் இவருக்கு 62 வயதாகிறது. சுப்பிரமணியனின் வீட்டிலிருந்து ஒரு கட்டிங் மெஷின், ரூபாய் நோட்டுகளை எண்ணும் கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்பவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் எத்தனை ஆண்டுகளாக இதே போல் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டனர் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளில் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போதும் மாற்றும்போதும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News