தமிழ்நாடு

மெட்ரோ ரெயில் பணி காரணமாக கடற்கரை காந்தி சிலை தற்காலிகமாக இடம் மாறுகிறது

Published On 2023-03-16 07:07 GMT   |   Update On 2023-03-16 09:26 GMT
  • மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் காந்தி சிலையை தற்காலிகமாக அகற்றி வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
  • முதலில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொண்டு வைக்க திட்டமிட்டார்கள்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

இதற்காக காமராஜர் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. சுரங்கத்துக்குள் இரட்டை வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நடைபெறும் இடத்தில்தான் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான காந்தி சிலை அமைந்துள்ளது.

12 அடி உயரம் கொண்ட இந்த சிலை 1959-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.

மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இந்த சிலையை தற்காலிகமாக அகற்றி வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

முதலில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொண்டு வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் பழமையான இந்த சிலையை வெகு தூரம் எடுத்து செல்வதன் மூலம் சிலை சேதமடையலாம் என்பதால் கொஞ்சம் தள்ளி வைப்பது பற்றி பரிசீலித்தனர். அதன்படி தற்போது சிலை இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிலை மூடப்பட்டது. இன்னும் சில தினங்களில் ராட்சத கிரேன் மூலம் காந்தி சிலை அகற்றப்பட்டு தள்ளி வைக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் காந்தி சிலை அதன் இடத்தில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News