தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
- மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
- பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைைமச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது.
இதில் மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கு சம வாயப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும், மாநில மகளிர் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த கொள்கை மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
2001-ல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் மகளிர் கொள்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாநில அரசுக்கு என தனியாக மகளிர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.