நாட்டு நாய் குட்டிகளை வளர்க்க விரும்பும் சென்னை மக்கள்
- பெண் நாய் குட்டியை விட ஆண் குட்டிக்கு விலை அதிகம்.
- தனி நபர்கள்தான் பல்வேறு இன நாய் குட்டிகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழகம் மாதவரத்தில் உள்ளது. ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, பராமரிப்பது, உணவு வழங்குவது போன்ற ஆராய்ச்சி படிப்புகள் இங்கு இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இவற்றின் ஒரு பகுதியாக கால்நடை உற்பத்தி கல்வி மையம் செயல்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கால்நடைகள் குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாடு, நாய், ஆடு போன்றவை எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன. குட்டிகளை எப்படி பாதுகாக்கின்றன. அவற்றின் உணவு, பராமரிப்பு போன்றவை குறித்து மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக நாய் பண்ணை ஒன்று கால்நடை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள 4 வகை நாட்டு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய இனங்களின் நாய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்து அவற்றின் குட்டிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு இனத்திலும் ஆண்-பெண் நாய்கள் பண்ணையில் வளர்த்து குறிப்பிட்ட காலத்தில் இனப்பெருக்கம் வழிமுறைகளை கையாண்டு அதன் மூலம் கிடைக்கும் நாய் குட்டிகளை விற்பனை செய்கிறார்கள்.
தனி நபர்கள்தான் பல்வேறு இன நாய் குட்டிகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனால் கால்நடை பல்கலைக்கழகமே நாய் பண்ணை மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு குட்டிகளை விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 4 வகையான நாய் குட்டிகளும் அங்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு செல்லப்பிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.
பெண் நாய் குட்டியை விட ஆண் குட்டிக்கு விலை அதிகம். ஆண் நாய்குட்டிக்கு ரூ.7 ஆயிரமும், பெண் நாய் குட்டிக்கு ரூ. 6 ஆயிரமும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அரசின் கால்நடைத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள நாட்டு நாய்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. நாட்டு நாய் குட்டிகளுக்கு மவுசு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க ஆசைப்பட்டு தினமும் பண்ணைக்கு வருகிறார்கள்.
குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நாய் குட்டிகள் கிடைக்கும் என்பதால் முன்பதிவு செய்து காத்து இருக்கின்றனர். பெயர், முகவரி, போன் எண்ணுடன் பதிவு செய்தால் நாய் குட்டி தயாரானவுடன் போனில் அழைத்து வழங்குகிறர்கள்.
இதுகுறித்து கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:-
கால்நடை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு நாய் பண்ணை மூலம் சிறந்த பயிற்சி கிடைக்கிறது. நாய்கள் ஆண்டுக்கு 2 முறை இனப்பெருக்கம் செய்யும். இந்த பண்ணை மூலம் வருடத்திற்கு 50 நாய் குட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது. 45 நாட்கள் குட்டியாக இருக்கும் போது அதற்கு தடுப்பூசி போட்டு தேவையானவர்களுக்கு வழங்குகிறோம்.
நாய் குட்டி தேவைப்படுவோர் மாதவரத்தில் உள்ள நாய் பண்ணையில் பதிவு செய்ய வேண்டும். முன்பணம் எதுவும் இல்லை. நாய் குட்டிகளை விற்கும் போது பணம் பெற்றுக் கொள்ளப்படும்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லப் பிராணிகள் வளர்ப்போர் விரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு குட்டிகளை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.