தமிழ்நாடு

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

Published On 2023-09-22 06:19 GMT   |   Update On 2023-09-22 06:19 GMT
  • சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட மக்கள் மத்தியில் இருந்து வந்தது.
  • ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை முக்கிய ரெயில் நிலையங்களில் வரவேற்க ரெயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை:

அதிவிரைவு வந்தே பாரத் ரெயில் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூருக்கு இயக்கப்படுகிறது. இந்த 2 மார்க்கத்திலும் இயக்கப்படுகின்ற வந்தே பாரத் ரெயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கோவை வந்தே பாரத் ரெயில் 108 சதவீதம் முழுமையாகவும், மைசூரு வந்தே பாரத் 130 சதவீதம் முழுமையாகவும் செல்கின்றன.

இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன் அடைகின்ற வகையில் எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயிலை இயக்க கடந்த 3 மாதமாக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தெற்கு ரெயில்வே கடந்த சில நாட்களாக அடிப்படையான பணிகளை முழு வீச்சில் செய்து முடித்துள்ளது.

இதையடுத்து சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் மற்றும் விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத் ரெயில் சேவையை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

காலை 11.30 மணிக்கு திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் எழும்பூருக்கு புறப்பட்டு வருகிறது. 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் 530 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

5 சாதாரண சேர்கார் பெட்டிகள், ஒரு எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி மற்றும் 2 பக்கமும் டிரைவர் கார் பெட்டிகள் கொண்டதாக இவை உள்ளன.

வந்தே பாரத் ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணி நேரம் 50 நிமிடங்களில் எழும்பூர் நிலையத்தை வந்து சேரும். எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். பயண தூரம் 653 கிலோ மீட்டராகும்.

இந்த ரெயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 5 நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் சேவை நடைபெறுகிறது.

சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட மக்கள் மத்தியில் இருந்து வந்தது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி. சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு ரூ.3025. இந்த பெட்டியில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். எந்த பக்கமும் இருக்கையை திருப்பி கொள்ளும் வசதி உள்ளது. ஒரே ஒரு பெட்டியில் மட்டுமே இந்த சொகுசு வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இவற்றின் கட்டணம் அதிகமாகும்.

சாதாரண சேர்கார் பெட்டியில் இருப்பதைவிட அதில் கூடுதலாக பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது.

எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலில் பயணிகளுக்கு 2 வேளை உணவு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவு உணவுடன் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். அதேபோல திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு எழும்பூருக்கு வரும்போது காபி அல்லது டீ, டிபன், மதியம் சாப்பாடு போன்றவை வழங்கப்படும்.

இந்த ரெயிலில் பேண்ட்ரி கார் வசதி இல்லை என்றாலும் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்படும். உணவிற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக ரூ.300-ம், எக்சிகியூட்டிவ் சேர்கார் பயணிகளுக்கு ரூ.375-ம் உணவிற்காக வசூலிக்கப்படுகிறது.

புதிய வந்தே பாரத் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாலும் திங்கட்கிழமை முதல் கால அட்டவணைப்படி இயங்கும் என்றும் இதற்கான முன்பதிவு 24-ந்தேதி முதல் தொடங்கும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை முக்கிய ரெயில் நிலையங்களில் வரவேற்க ரெயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

2 நிமிடங்கள் ரெயில் நிறுத்தப்படும். அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன், பொதுமக்களும் புதிய ரெயிலை வரவேற்க நிலையங்களில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல விஜயவாடாவில் இருந்து வரும் வந்தே பாரத் ரெயிலை அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், சென்ட்ரல் நிலையத்தில் வரவேற்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

Similar News