304 ஏழை ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பில் திருமணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21-ந்தேதி நடத்தி வைக்கிறார்
- மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துகின்ற திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.
சென்னை:
2024-2025-ம் நிதி ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கிட உள்ளார்.
அதேநாளில் மாநிலம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளன.
சென்னையில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை இறையன்பர்கள் மகிழ்ச்சி கொள்கின்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதுபோன்ற பக்தர்களின் நலன் காக்கும் திட்டங்களை இந்த அரசுதான் நிறைவேற்றி வருகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில் கோவில்கள் சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துகின்ற திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு நபருக்கு ஆகின்ற செலவின தொகை ரூ.800-ல் நான்கில் ஒரு பங்கான ரூ.200 மட்டுமே பக்தர்களிடம் பெறப்படுகிறது. இதர தொகை அந்தந்த கோவில்களே செலவிடுகின்றன. இதன்மூலம் 47,304 பெண் பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கோவில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தில் 20 கோவில்களிலும், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 9 கோவில்களிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு 20 கோவில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், சுந்தரானந்த சித்தர், பாம்பாட்டி சித்தர் போன்ற சித்தர்களுக்கும், திருவருட் பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், தமிழ் மூதாட்டி அவ்வையார், சமய குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர், நாலாயிர திவ்ய பிரபந்தம் மறைநூலினை தொகுத்தவரான ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார், 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து பெருமை சேர்த்த அரசு திராவிட மாடல் அரசாகும்.
எந்த ஒரு கோவில் சார்பிலும் மகா சிவராத்திரி விழா தனியாக கொண்டாடப்படாத நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றபின் 7 கோவில்களில் பக்தர்கள் பங்கேற்புடன் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 2 கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது.
அதேபோல சென்னை மயிலாப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழாவும், சுவாமி ஐயப்பனுக்கு மலர் பூஜை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்-காசி ஆன்மிகப் பயணத்தை ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே முதல் முதலில் செயல்படுத்திய அரசு திராவிட மாடல் அரசாகும். 2 ஆண்டுகளில் 500 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு 1,003 மூத்த குடிமக்களும் மற்றும் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு 1,014 மூத்த குடிமக்களும், அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் 1,008 மூத்த குடிமக்களும் பயன்பெற்றுள்ளனர்.
இத்திட்டங்களுக்கான நிதி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைதுறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2,226 கோவில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதோடு, கோவில்களுக்கு சொந்தமான ரூ.6,792 கோடி மதிப்பிலான 7,069.30 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பில் கட்டணமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2022-2023-ம் ஆண்டில் 500 ஜோடிக்கும், 2023-2024-ம் ஆண்டில் 600 ஜோடிகளுக்கும் என 1,100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களின் இல்லங்களில் ஒளி ஏற்றிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேரும்.
இந்தாண்டு 700 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் வருகிற 21-ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்க உள்ளார். அதே நாளில் தமிழகம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட கோவில்களில் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு உடனுக்குடன் நீரினை வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவில்கள் சார்பில் 3 நாட்கள் அன்னதானம் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் தொடரலாம் எனவும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிடவும் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.
சிதம்பரம் நடராசர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை பொறுத்தளவில் கோர்ட்டு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளதோடு, அதனை ஆய்வு செய்வதற்கு வெளி மாநிலத்தை சேர்ந்த மாவட்ட கலெக்டரை நியமித்திருக்கிறது. ஆகவே சிதம்பரம் கோவிலில் தவறுகள் நடந்திருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறையும், திராவிட மாடல் அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட ரீல்ஸ் பிரச்சனை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதித்துறை காட்டுகின்ற திசையை நோக்கி பயணிப்போம். புழல் கோவில் பூசாரி ஒருவர் மீது மின்சாரம் தாக்கியது எதிர்பாராமல் நடந்த விபத்தாகும். அனைத்து கோவில்களிலும், முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களது துயரங்களை களைவதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். என்னுடைய பணிகளால் இந்த பொறுப்பு எனக்கு தகுதியான பொறுப்பு என்பதை நான் நிரூபித்து காட்டுவேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார். அவர் பொறுப்புக்கு வந்த உடனேயே சவாலாக இந்த பெருமழை வந்த போதும் அதனை திறமையாக சமாளித்தவர் என்ற நற்சான்றிதழ் மக்களிடம் கிடைத்திருக்கின்றது.
கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமண விழாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்ற மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் கடுமையான ஓய்வில்லாத உழைப்பாளிகளாகவும், மங்காத புகழுக்கு சொந்தக்காரர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, வான்மதி, ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.