கோவையில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- கட்டிடத்தில் சுமார் 120 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியும் வகையில் 2 கூட்டரங்குகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, கயல்விழி, செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை:
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.280 கோடியே 73 லட்சம் செலவில் இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட மோகனூர்-நாமக்கல், சேந்தமங்கலம்-ராசிபுரம் சாலை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.53 கோடியே 40 லட்சம் செலவில் 4 வழித்தடத்திற்கு அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட பல்லடம்-தாராபுரம் சாலை மற்றும் கோயம்புத்தூர் நகரில் ஜி.என். மில்ஸ் சந்திப்பில் 41 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள 4 வழித்தட சாலை மேம்பாலம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, கயல்விழி, செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சமூக நல இயக்ககத்திற்கு சென்னை, காமராஜர் சாலையில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 26,044 சதுர அடி பரப்பளவில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் சுமார் 120 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியும் வகையில் 2 கூட்டரங்குகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் இயக்குநர் கார்த்திகா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.