தமிழ்நாடு

சீரான மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சூளகிரியில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

Published On 2024-09-27 05:24 GMT   |   Update On 2024-09-27 05:24 GMT
  • பசுமைக் குடில்களில் வளர்க்கப்படும் பயிர்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன.
  • அ.தி.மு.க.வினர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய், அவரைக்காய், முட்டை கோஸ், காலிபிளவர் போன்ற தோட்டப் பயிர்களும், சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி போன்ற மலர் வகைகளும், கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளும் மற்றும் பாலிஹவுஸ் எனப்படும் பசுமைக் குடில்களில் கேப்சிகம் மற்றும் உயர்வகை ரோஜா, ஜெர்பரா போன்ற மலர் வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இப்பகுதியில் விளையும் காய்கறிகள், மலர்கள் மற்றும் கீரை வகைகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பசுமைக் குடில்களில் வளர்க்கப்படும் பயிர்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு, இப்பகுதி விவசாயத்திற்கு சீரான மும்முனை மின்சாரத்தை வழங்காத காரணத்தால், சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர் வகைகளுக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் கருகும் சூழ்நிலை உருவாகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள தோட்டப் பயிர்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர் வகைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, மும்முனை மின்சாரத்தை வழங்காத மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு உடனடியாக சீரான மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் சார்பில், வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், 'சூளகிரி ரவுண்டானா அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையிலும்; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மு.அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News