ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சாமி கற்சிலைகள் உடைப்பு- பதிவேடுகள் தீ வைத்து எரிப்பால் பரபரப்பு
- மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
- கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக் குளத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
செட்டிக்குளம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கோவில் நடை அடைத்து பூட்டப்பட்டது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி இரும்பு கேட்டின் ஒரு பகுதியை வளைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்குள்ள வாகன மண்டபத்திற்கு சென்ற அவர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்த மண்டபத்தில் விநாயகர், முருகன், பைரவர் கல் சிலைகளும், கருடாழ்வார், சிற்ப மரத்தினாலான வாகனங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும், பைரவர் சிலையை கீழே தள்ளிவிட்டதோடு கருடாழ்வார் மர வாகனத்தையும் உடைத்துள்ளார். பின்னர் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய கோவில் பதிவேடுகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இன்று காலை கோவிலை திறந்த பார்த்தபோது சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சிலைகளை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் முகம் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்தது செட்டிக்குளம் அருகேயுள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ் (வயது 36) என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. அவர் தானாக கோவிலுக்குள் புகுந்தாரா அல்லது யாராவது தூண்டுதலின் பேரில் வந்தாரா என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.