தமிழ்நாடு

வாக்குப்பதிவு சதவீதம் மாற்றம் - குத்துமதிப்பாக புள்ளி விவரங்களை வெளியிட்டார்களா தேர்தல் அதிகாரிகள்?

Published On 2024-04-22 07:53 GMT   |   Update On 2024-04-22 08:02 GMT
  • வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
  • தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை வெளியிட்டது.

சென்னை:

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்கு பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு மறுநாள் வாக்கு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.94 சதவீதம் பதிவானதாக அறிவித்தது. இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.

வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை நேற்று வெளியிட்டது.

அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மாறி மாறி வாக்குப் பதிவு சதவீதத்தை தெரிவித்து வந்ததால் ஏன் இந்த குளறுபடி என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.


இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

செல்போன், செயலி வருவதற்கு முன்பு வாக்குச் சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவாகும் வாக்கு விவரம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த வாக்குச்சாவடி அலுவலர்களும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகளும் சரியான புள்ளி விவரங்களை மேலிடத்துக்கு தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வாக்கு சதவீதத்தை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடைசியாக அனுப்பிய செய்தி குறிப்பில், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தோராயமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறி இருந்தார்.


இதுபற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவு சதவீத மாறுபாடு என்பது வழக்கமாக நடக்க கூடியதுதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரிய அளவில் நாடு முழுவதும் இதே போல் வாக்கு சதவீத வித்தியாசம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அதே போல் இப்போதும் குளறு படி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதீத ஆர்வம் தான். ஒவ்வொரு மணிக்கும் எத்தனை ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கேட்பதால் வரும் பிரச்சனை. ஏனென்றால் ஒவ்வொரு பூத்திலும் உள்ள அலுவலர்கள் அங்கு உள்ள பணியை டென்ஷனுக்கு மத்தியில் பார்க்கும் போது மேலிடத்துக்கு தகவல் சொல்லும்போது பதற்றத்தில் தவறுதலாக புள்ளி விவரங்கள் சொல்வது உண்டு. எனவே இந்த முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.

அதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை சேகரித்தாலே போதுமானது. தேவையில்லாத டென்ஷன் குறையும்.


வாக்காளர் பட்டியலில் இருந்து நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கிறது. இதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் கார்டையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் இதை செய்ய முற்பட்ட போது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இதை கட்டாய மாக்காமல் விட்டு விட்டனர். இதனாலேயே பாதி பிரச்சனை நடக்கிறது.

வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டால் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்றெல்லாம் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறது என்றால் அது அவர்களின் தவறு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 6 மாதத்துக்கு முன்பே கொடுக்கிறார்கள்.

அதை அரசியல் கட்சிகள் சரிபார்க்காமல் இருந்து விட்டு இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News