'விறகு வாங்கலியோ விறகு' என்பது போல் பலாப்பழத்தை தலையில் வைத்து பிரசாரம் செய்வேன்
- வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர்.
- பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.
சென்னை:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
இதைத்தொடர்ந்து அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதே சின்னத்தை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது பற்றி மன்சூர் அலிகானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பலாப்பழம் சின்னத்தை முதலில் கேட்டது நான் தான். எனக்கு பலா சின்னம் கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., டி.பி.எஸ் என யாருக்கு ஒதுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை.
பலாப்பழம் எனக்கு பிடித்த பழம். 'விறகு வாங்கலியோ விறகு' என்பது போல பலாப்பழத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நான் வெல்வது உறுதி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பல முறை கூறிவருபவர் நான்.
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தினமும் முயற்சி செய்தேன். என்னை பார்க்கவிடவேயில்லை.
மோடியா? லேடியா? என ஜெயலலிதா தைரியமாக கேட்டார். வாக்குகளை பிரிப்பதற்கு நான் போட்டியிடுகிறேன் என சொல்கிறார்கள் 'படுபாவிகள்'
வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் அமோகமாக என்னை வரவேற்கின்றனர். பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.