தமிழ்நாடு

சிந்துபாத் கதைபோல செல்லக்கூடாது: கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்- தினகரன் பேச்சு

Published On 2023-08-01 07:46 GMT   |   Update On 2023-08-01 07:46 GMT
  • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
  • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

தேனி:

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News