தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு அன்னம் வழங்கும் மதுரையின் அட்சயப் பாத்திரத்திற்கு உதவலாமே!

Published On 2024-03-27 06:34 GMT   |   Update On 2024-03-28 11:00 GMT
  • அன்னதானப் பணியின் அவசியத்தை உணர்ந்த பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
  • நெல்லையில் பிறந்தாலும் மதுரையில் மையம்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி எனச் செயல்பட்டு வருகிறார்.

மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பசியாற்றும் பணியினை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த நெல்லை பாலு.

மதுரைத் தெருக்களில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையின் அட்சயப் பாத்திரம் என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி, கடந்த 1050 நாட்களுக்கு மேலாக அறுசுவை மதிய உணவை உயர்தரத்துடன் வழங்கி வருகிறார் அட்சயப் பாத்திரத்தின் நிறுவனரான நெல்லைபாலு.

விடாது மழை பெய்தாலும், கடுமையான வெயில் காய்ந்தாலும் கூட மதிய உணவு வழங்குவதைத் தொடர்ந்து செய்து வருகிறார் இவர். தன்னலம் கருதாது இவர் ஆற்றிவரும் அன்னதானப் பணியின் அவசியத்தை உணர்ந்த பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.

சேவையில் சிறந்த சேவை அன்னதானம். அதில் முழுமையாகப் பங்கெடுக்க முடியாதவர்கள் சில பங்களிப்புகளின் மூலம் உதவி செய்வது உன்னதமான பணி. அதில் விருப்பமுள்ள பலர் கலந்துகொள்கிறார்கள். அதனால் இந்தப் பணியை மேலும் மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டுகோலாக இருக்கிறது என்கிறார் பாலு .


நெல்லையில் பிறந்தாலும் மதுரையில் மையம்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி எனச் செயல்பட்டு வருகிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மகாகவி பாரதியின் மீதான பற்றால் பாரதி யுவ கேந்திரா என்கிற அமைப்பை ஏற்படுத்தி பார்வையற்ற 250 மாற்றுத்திறனாளிகளுக்குப் பல ஆண்டுகளாக மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கி வருகிறார்.

காஞ்சி ஸ்ரீமகா பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் பெயரால் அனுஷத்தின் அனுகிரகம் என்கிற புனித அமைப்பை நிறுவி ஆன்மிகம் தழைத்தோங்க அரிய பணிகளைச் செய்து வருகிறார்.

அதேபோல் மாதந்தோறும் அனுஷநட்சத்திர நாளில் ஸ்ரீமஹா பெரியவரின் அருமை பெருமைகளைக் கூற ஆன்றோர்களை அழைத்துவந்து சிறப்புச் சொற்பொழிவாற்றச் செய்து செவிக்கு விருந்து படைக்கிறார். அந்நாளில் ஸ்ரீமஹா பெரியவா விக்ரஹம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து அனைவரும் அந்த மகானின் ஆசி பெற்று வாழ்வில் வளம் பெறச் செய்கிறார்.

மதுரையின் அட்சய பாத்திரத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க விரும்புகிறேன். அன்பர்களின் நல்லாதரவுக்காகக்


காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அட்சயப் பாத்திரம் நிறுவனர் நெல்லைபாலு.

செல்: 94426 30815 (G-pay).

MADURAIYIN ATCHAYA PAATHIRAM TRUST என்ற பெயரில் செக் அனுப்பிட வேண்டுகிறோம்.

அத்துடன் தங்களது முகவரி மற்றும் ஆதார், பான் ஜெராக்ஸ் அனுப்பிட வேண்டுகிறோம்.



Tags:    

Similar News