மதுரவாயல் அருகே சினிமா பைனான்சியரிடம் வேலை பார்த்தவர் கொலை- போலீஸ்காரர் கைது
- பாபுஜி மீது நொளம்பூர் போலீசில் வெங்கட்ராமன் புகார் அளித்தார்.
- வீட்டின் மாடியில் வைத்து சரமாரியாக அடித்து பாபுஜியை அவர்கள் கொலை செய்தனர்.
போரூர்:
சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் என்கிற சோட்டா வெங்கட். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மயிலாடுதுறையை சேர்ந்த பாபுஜி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
பாபுஜி வசூல் செய்த பணத்தை கையாடல் செய்ததாகவும், மேலும் 2 ½ பவுன் நகைகளை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாபுஜி மீது நொளம்பூர் போலீசில் வெங்கட்ராமன் புகார் அளித்தார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி இரவு கோயம்பேட்டில் நின்ற பாபுஜியை வெங்கட்ராமன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார்.
பின்னர் வீட்டின் மாடியில் வைத்து சரமாரியாக அடித்து பாபுஜியை அவர்கள் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை மாங்காடு அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியில் வைத்து எரித்துவிட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் கொலை உள்ளிட்ட 7பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே பைனான்சியர் வெங்கட்ராமன், அவரது கூட்டாளிகளான மதுரவாயலை சேர்ந்த சரவணன், திலீப், துணை நடிகரான புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் கோபி, வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கோபி கிஷோத், கார்த்திகேயன், சாரதி ஆகிய 8பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாபுஜியை கடத்தி நிர்வாணபடுத்தி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியபோது வெங்கட்ராமன் வீட்டிற்கு பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு அமல்ராஜ் வந்து சென்றது தெரியவந்தது.
மேலும் சம்பவம் நடந்த வீட்டில் மது அருந்திய அமல்ராஜ் சுமார் 1மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்து தாக்குதல் சம்பவங்களை நேரில் பார்த்துள்ளார்.
அதன்பின்னர் தான் பாபுஜி எரித்து கொலை செய்யப்பட்டார்.
போலீஸ்காரர் ஒருவர் கடத்தல் சம்பவத்தை நேரில் பார்த்தும் தன் கண் முன்னால் நடந்த ஒரு குற்ற சம்பவத்தை பற்றி உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவிக்காமல் மறைத்து உள்ளார்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் 9-வது குற்றவாளியாக போலீஸ்காரர் அமல்ராஜ் சேர்க்கப்பட்டார். அவரை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.