மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் குறைந்து 30 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்டம் நிர்வாகம் தடை விதித்தது.
தற்போது அங்கு மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து இன்று 30 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைய தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைந்த போதும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் குறைந்து 30 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளவான 120 அடி தண்ணீர் இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலை 30 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாகவும், கால்வாயில் 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.