தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர நினைப்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது: அமைச்சர்
- கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பழுது நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சிறு பழுது காரணமாக தங்கத்தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி ராமேஸ்வரம், சமயபுரம் மாரியம்மன், திருத்தணி முருகன் கோவில்களில் ஓடாமல் இருந்த தங்கத்தேர் பழுது நீக்கி, பக்தர்களின் நேர்த்திக் கடன் செலுத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.
கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என கூறுகிறார்கள். இது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. இது திராவிட மண். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சி அமையும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.