தமிழ்நாடு

சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு

Published On 2023-09-20 09:37 GMT   |   Update On 2023-09-20 09:37 GMT
  • சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பங்களை வைத்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.

சென்னை:

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

சென்னையில் கடந்த பொங்கல் விழாவையொட்டி 4 நாட்கள் 18 இடங்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற்றது.

இது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை, கோவை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திரு நெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சங்கமம்- கலைத்திருவிழாவை நடத்தும் வகையில் நாட்டுப்புற கலை விழாக்கள் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் முதற்கட்டமாக நடத்தப்பட உள்ளது.

இந்த கலைவிழா மூலம் 3 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன் அடைவார்கள்.

இதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமாக சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோவை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறைக்கு www.artandculcure.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து எங்களது மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு வரும் அக்டோபர் 6-ந் தேதிக்குள் பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை வைத்து கலைஞர்களை தேர்ந்தெடுத்து நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News