போதை பொருள் கடத்தலுக்கு துணைபோகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை- ஓராண்டில் 20 பேர் சஸ்பெண்டு
- போதை பொருள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறையில் உள்ள நபர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- கடந்த ஓராண்டில் 20 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகம் முழுவதும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில்இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனைகளை நடத்தி வருகிறோம். இதனால் ஆந்திராவில் இருந்து கஞ்சா வியாபாரிகள் தமிழகத்துக்கு நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கஞ்சா கிடைக்காமல் போதைக்கு அடிமையாகும் நபர்கள், மருந்து கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறையினரோடு இணைந்து காவல் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட அளவில் டி.எஸ்.பி. அந்தஸ்தில் தனி அதிகாரியை நியமனம் செய்ய முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்டு உள்ளது.
இது வரவேற்கதக்க விஷயமாகும். இந்த அதிகாரியின் கீழ் போதை பொருட் தடுப்பு பிரிவு மற்றும் மது விலக்கு அமலாக்கத்துறை காவலர்கள் இணைந்து செயல்படுவார்கள். இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் போதை பொருள் தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டம் மூலம் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக நிச்சயம் மாற்ற முடியும்
புதிதாக நியமிக்கப்பட உள்ள இந்த அதிகாரி மாநில அளவில் செயல்படும் அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி.யின் கீழ் பணியாற்றுபவராக இருப்பார். அதே நேரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து செயல்படுவார்.
இதன் மூலம் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து போதை பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருப்பது போன்று போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறையில் உள்ள நபர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் 20 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.