தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 'வாக்காளர்களுக்கு நோட்டா' விருப்பம்- தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆலோசனை

Published On 2023-07-19 08:30 GMT   |   Update On 2023-07-19 08:30 GMT
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்க ‘நோட்டா’ விருப்பம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
  • ஒரு நகராட்சியில் அதிகபட்சமாக 52 வார்டுகளும் ஒரு டவுண் பஞ்சாயத்தில் 21 வார்டுகளும் இருக்க வேண்டும்.

சென்னை:

சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் மின்னணு எந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் தவிர கூடுதலாக ஒரு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கருத்தை தனது உரிமையாக பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த விருப்பத்திற்கு 'நோட்டா' என குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்க 'நோட்டா' விருப்பம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இனிவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா இடம்பெறும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா ஒரு பகுதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மாநில முனிசிபல் நிர்வாகம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட, அறிவிப்பு மூலம் நோட்டா நடைமுறை சாத்தியமாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நோட்டா விருப்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற உள்ளது.

ஏறக்குறைய 9 ஆண்டுகளாக மாநில தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்துமாறு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த நோட்டா விருப்பத்தை நீட்டிக்க அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

நகராட்சி விதிகளின்படி ஒரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 80 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்டிருந்தால் அது 230 வார்டுகளாக இருக்கலாம். ஒரு நகராட்சியில் அதிகபட்சமாக 52 வார்டுகளும் ஒரு டவுண் பஞ்சாயத்தில் 21 வார்டுகளும் இருக்க வேண்டும்.

Tags:    

Similar News