தமிழ்நாடு

உலக வங்கி பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

Published On 2023-08-25 10:26 GMT   |   Update On 2023-08-25 10:26 GMT
  • ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
  • பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தென் அமெரிக்காவில் உள்ள சிலி குடியரசு நாட்டிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று உள்ளார். சிலி குடியரசு நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சான்டியாகோ மாநகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றார்.

சிலி குடியரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் கார்லோஸ் மான்டெஸ் சிஸ்டர்னாஸ் புதிய தொழில் நுட்பம் குறித்து பேசினார்.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒரு குடியிருப்புக்கு ரூ.1.5 லட்சம் மானியமாகவும் தமிழ்நாடு அரசு ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள தொகை பயனாளிகளால் ஏற்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,45,074 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் 4,09,581 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் திறனுக்கேற்ற வாடகை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முன்னோடியாக 6 திட்டப் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள், தங்கும் இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து 5 லட்சம் குடியிருப்புகள், தனி வீடுகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.30 லட்சம் குடும்பங்களுக்கு மனைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News